எனது
சொந்த ஊர் திருச்சி. கடந்த 30
வருடங்களாக தொழில் நிமித்தமாக கரூரில் வசித்து வருகிறேன் 1968 ல் பிறந்த நான்... என்னுடைய குழந்தை பருவத்தில்
இருந்தே, ஒரு பலவீனமான உடல் நலத்தோடுதான் வாழ்ந்து வந்திருக்கிறேன்.
அடிக்கடி காய்ச்சல் இருமல் சளி போன்ற உடல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும்... ஆங்கில
மருத்துவத்தை நாடி, மருந்துகள்
மாத்திரை ஊசி என சரி செய்து கொள்வதும் என்றே எனது இளமை காலங்கள் நகர்ந்தது.
எனது திருமணத்திற்கு
முன்னும் அதன் பின்னும் சுமார் 15
வருடங்கள் கரூரில் தனியாக இருந்ததால், ஹோட்டல்
சாப்பாடு எனது உடல் நலத்தை இன்னும் கெடுத்தது . அதிகமான ரசாயன மருந்துகள்
உட்கொண்டதால் புதிதாக தோல் நோயும் ஆட்கொண்டது.
மற்ற உடல் தொந்தரவுகள்
போல் அல்லாமல் ... இது தினசரி அரிப்பும்
தடிப்பும் என வாடிக்கையானது. அரிப்பு என்றால் உடலின் ஏதாவது ஒரு பாகத்தில்
கடுமையாக அரிக்கும். எப்படி சொரிகிறேனோ.. அந்த
டிசைனில் தடித்துக்கொள்ளும். அடுத்த நாளைக்குள் மறைந்து விடும். அதற்குள்
பார்க்கும் 3ம்
நபர்கள் பயந்து போய் விசாரிக்கும் அளவுக்கு தடிப்பு இருக்கும். இது முகம் உட்பட உடலின் எல்லா பாகங்களிலும்
வெவ்வேறு சமயம் நடக்கும். எந்த
மருந்துகளுக்கும் தீராமல் கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடிந்தது.
ஆங்கில மருத்துவம் மட்டும்
இன்றி மற்ற பல மருத்துவங்களான சித்தா ஆயுர்வேதம் யுனானி ஹோமியோபதி நாட்டு
மருந்துகள் என்று அனைத்தையும் முயன்று பார்த்தும்.. தொடர்ச்சியாக மருந்துகள்
எடுக்கும் போது குறைவதும், நிறுத்தினால்
மீண்டும் வருவதுமாகவே இருந்தது. எதை சாப்பிட்டால் அலர்ஜி வருகிறது, ஏன் ஒத்துக்கொள்ளவில்லை... போன்ற சிந்தனைகள் தான்
எனக்கு இருந்ததே தவிர இது நாம் எடுத்த அளவுக்கு அதிகமான மருந்துகளின் பின் விளைவு
என்று புரியவே இல்லை.
இந்த நேரத்தில் எனது
மனைவியின் கடுமையான முதுகு வலிக்காக அக்குபங்சர் சிகிச்சை எடுக்க மேட்டுப்பாளையம்
ஹீலர் மகி ராமலிங்கம் அவர்களை சந்திக்க சென்றோம்.
அங்கு இருந்த கூட்ட
மிகுதியால் சிகிச்சை எடுப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். எனது மனைவியின்
பிரச்சனையை விளக்கமாக சொல்வதற்காகவும், அவர்கள்
கொடுக்கும் சிகிச்சையை காணும் ஆவலிலும், எனக்கும்
முதுகு வலி என்று டோக்கன் வாங்கிக்கொண்டு
நானும் உள் நுழைந்தேன்.
எங்களது முறை வந்ததும்..
நான் எனது மனைவி உட்பட சுமார் 25 பேர்
வரிசையாக அமர வைக்கப்பட்டோம். பிறகு மகி.ராமலிங்கம் அவர்கள் வரிசையாக நாடி
பார்த்து... பார்த்தவுடன் சிகிச்சையும் அளித்துவிட்டு.. அடுத்தடுத்து நபர்களை
பார்த்துக் கொண்டே நகர்ந்தார் யாரையும் எந்த கேள்வியும் கேட்க விடவில்லை. பேசவும்
அனுமதிக்கவில்லை. எனது மனைவிக்கும் இதே கதி தான். எனக்கு சிகிச்சை கொடுக்க எனது
கையை அவர் பிடித்தவுடன்.. அவரது கையை நான்
பிடித்துக் கொண்டேன். எனது மனைவியை பற்றி, அவரது
தொந்தரவுகளை பற்றி, இதுவரை
எடுத்த ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை பற்றி எடுத்துக் கூறினேன். அவர் "
ரிப்போர்ட்டெல்லாம் எடுத்து வந்திருக்கிறீர்களா " ,என்று ஆர்வமாக கேட்டார். நானும் "ஆமாம் ", என்றேன். " போகும்போது அந்த குப்பைத்
தொட்டியில் அதை போட்டு விடுங்கள் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன்.
சரியாகிவிடும் நன்றாக இருந்தால் வர வேண்டாம். தொந்தரவு நீடித்தால் 15 நாள் கழித்து வாருங்கள் ", என்று கூறிவிட்டு எனக்கும் நாடி பார்த்து சிகிச்சை
அளித்துவிட்டு அடுத்த நபருக்கு நகர்ந்து விட்டார்.
பல கிலோமீட்டர் பயணம்
செய்து... பல மணி நேரம் காத்திருந்து...
இத்தகைய பதிலை கேட்டு ... அதிர்ச்சியும் கோபமும் இயலாமையும் என்று கலந்து
கட்டியான உணர்ச்சிகளோடு அங்கிருந்து வெளியேறினோம்.
வீடு திரும்பும் பயணத்தின்
போதே எனது மனைவி ஓரளவு வலியிலிருந்து மீளத் துவங்கினார். லேசாக நம்பிக்கை துளிர்
விட ஊர் திரும்பினோம்.
" பொய்
சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது " என்று ஒரு பழமொழி உண்டு. அடுத்த நாள்
அந்த பழமொழியை நான் அடிக்கடி நினைக்க வேண்டியதாக இருந்தது.
காலையிலிருந்து தும்மல்
துவங்கியது. அது சிறிது சிறிதாக தொடர்
தும்மலாக மாறியது அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர முடியவில்லை. என்னிடமிருந்த
கைகுட்டை நனைந்து ஒழுகியது. எங்களது வணிகத்திற்காக வாங்கி வைத்திருந்த.. புதிய
துண்டுத்துணிகளால் ஆன வேஸ்ட் பாக்கெட்டை பிரித்து இரண்டு மூன்று துணியை
பயன்படுத்தியாகி விட்டது. தொடர் தும்மலால் மார்பு, விலா
பகுதிகள் வலிக்கத் துவங்கி விட்டது. பொறுத்து, பொறுத்து
பார்த்து முடியாமல் .. பகல் 12 மணி
போல் மேட்டுப்பாளையம் மகிராமலிங்கம் சார் சிகிச்சை மையத்திற்கு தொடர்பு கொண்டேன்.
அவர்கள் இரவு 9
மணிக்கு மேல் தொடர்பு கொள்ளுங்கள் அப்போதுதான் சார் பேசுவார் என்று கூறி
விட்டார்கள். ஆனால் நான் எனது மோசமான நிலையை சொல்லி அரற்றியதால் இரண்டு மணிக்கு
தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள்.
மீண்டும் பேசியபோது
மகிராமலிங்கம் சார் லைனில் வந்தார். முதுகு வலிக்காக முதல் நாள் சிகிச்சை
எடுத்ததையும் இன்றைய என்னுடைய உடல் தொந்தரவையும் எடுத்துச் சொன்னேன்.
அதற்கு அவர், " மகிழ்ச்சி, உடல்
சிறப்பாக வேலை செய்கிறது", என்று
கூறினார். அதிர்ச்சி அடைந்த நான்.. " இப்படி தும்மல் வந்தால், சிட்ரிஸன் என்ற மாத்திரையை பயன்படுத்துவேன்.
பயன்படுத்தட்டுமா.." என்று கேட்டேன்.
அவர், " மாத்திரையை சாப்பிட்டீர்களா..." என்று
கேட்டார். நான் இல்லை என்றதும், " இது
போன்ற மாத்திரைகளை, இன்று
மட்டுமல்ல.. இனி எப்போதுமே.. எதற்காகவும்.. பயன்படுத்தாதீர்கள். தும்மல் சரியாகும்
வரை எதுவும் சாப்பிடாதீர்கள். ஓய்வில் இருங்கள் ", என்று
கூறி தொலைபேசியை வைத்து விட்டார்.
நானும் சாப்பிடும்
நிலையில் இல்லை .அன்று முழுதும் ஓய்வில் இருந்தேன் அடுத்த நாள் தும்மல்
படிப்படியாக குறைந்து நின்று விட்டது. அது மட்டுமல்லாமல் என்னுடைய தொடர் தோல்
அரிப்பும், தடிப்பும் அதன் பிறகு வரவே
இல்லை. எந்த உணவுகளை எல்லாம் நான் இதற்காக தவிர்த்து வந்தேனோ... அவற்றையெல்லாம்
சாப்பிட்டும், எனக்கு
அந்த அரிப்புகள் வராமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
நம்முடைய உடல் தொந்தரவு
குறித்து எதுவுமே கேட்காமல்,(வேறு
நோயை மாற்றிப் சொல்லியும்...) நாடி பார்த்து, ஒரே ஒரு
இடத்தில் தொடுவதன் மூலம் ... பல காலமாக நீடித்து இருந்த ஒரு நோயை... தொந்தரவை
நீக்கிவிட முடியும், என்பதை
உணர்வு பூர்வமாக சொந்த அனுபவமாக உணர்ந்தேன்.
நான் அறிந்த வகையில்
அக்குபங்சர் சிகிச்சை என்பது உடல் முழுவதும் பல இடங்களில் ஊசிகளை குத்தியும் சில
நேரங்களில் அதில் லேசான மின் அதிர்வை தந்தும் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் இங்கு
ஒரே ஒரு இடத்தில் ஊசி கூட அல்லாமல் விரல் நுனியினால் தொடுவதன் மூலமாகவே சிகிச்சை
அளிக்கப்பட்டது . அது மிகச்சிறந்த பலனும் அளித்தது என்பது எனக்கு ஆச்சரியத்தையும்
ஆர்வத்தையும் ஒருங்கே தூண்டி இது குறித்தான தேடுதலை துவக்கி வைத்தது.
நன்றி..
சி.பேரின்பராஜன், கரூர்